தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பலர் போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதனால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை அழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2,400 கிலோ கஞ்சா, 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 4,334 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 31.2 டன் குட்கா மற்றும் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 3 கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள், 6 நிலம், வீட்டு மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அடுத்தாக, மதுரை மாவட்டத்தில் முக்கிய 7 கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கி கணக்குகள், 4 நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டத்தில் 6 கஞ்சா வியாபாரிகளின் 8 வங்கி கணக்குகள், வீடு மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், நகர காவல் ஆணையர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் செயல்பட்டு உள்ள மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் போதை பொருட்கள் கடத்துபவர்களையும் இது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று காவல் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.