தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற திமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் காப்பீட்டு திட்டத்தால் பல்வேறு குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 1.37 கோடி குடும்பங்கள் பயன் பெற்று இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட 31,145 நபர்களுக்கு 382.05 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் 32,23,064 நபர்களுக்கு ரூ.182. 64 கோடி செலவில் RT-PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். அண்மையில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட 2,049 நபர்களுக்கு திமுக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் 5.83 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்ற முதல்வர் முக.ஸ்டாலின் சமீபத்தில் கூறியபடி காப்பீடு திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வருடந்தோறும் ரூ.5 லட்சம் மருத்துவ பயன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணையாமல் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம். மேலும் புதிதாக சேரும் குடும்பத்தினருக்கும் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ மற்றும் கல்வி சலுகைகளும் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.