தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் 220 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மழை தொடரும் என்று தகவல் வந்ததும் மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி உள்ளோம்.
அவர்கள் 30ஆம் தேதி வரை மாவட்டங்களிலிருந்து மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பார்கள். மழையில் சாலைகள் சேதமடைவதை விட பயிர்ள் அதிகம் சேதமாக வாய்ப்புள்ளது. எனவே பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளன. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். 344 கால்நடைகள் இறந்துள்ளன.விரைவாக நிவாரண உதவி வழங்கும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.