தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.