தமிழகத்தில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்பட்டு வருகின்றது. தமிழக மக்களுக்கு தொற்று பற்றியும், தடுப்பூசி பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இதன் பயனாக மாநிலம் முழுவதும் மக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவச் சிலைக்கு நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசு சார்பில் கம்பர் விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டதுஎன்று கூறினார்.
மேலும் கம்பர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். கவி திறமையே உலகம் முழுவதும் அறிவார்கள் எனக் கூறினார். பின்னர் கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. கட்டுப்பாடுகள் எதுவும் பெரிய அளவில் தற்போது இல்லை. மார்ச் 31க்கு பிறகு முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ள ஆலோசனை நடக்க உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த போதிலும் அண்டை நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகின்றது. அதனை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் 1.30 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வரும் சனிக்கிழமை 20 மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.