தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 331 பேர் பாதிப்படைந்துள்ளனர். ராமநாதபுரம் மண்டபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள 865 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ,தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 30,ஆயிரம் இடங்களில் 46,லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் 64% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். மேலும் 2 வது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நன்னீரில் வளரும் ஏடிஸ் கொசுவை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் கேரளாவில் இருந்து பரவும் வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.