தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும், தளர்வு அளிக்கப்படும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பது, தியேட்டர்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.