தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா 2-ம் அலைக்கு பின் மக்கள் ஓரளவு பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினார்.
அதுமட்டுமல்லாமல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் பலனாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (பிப்..19) மாநிலம் முழுவதும் 38 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒமிக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த B A2 எனும் வைரஸ் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ? என்று பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மறுபுறம் ஊரடங்கு இருக்காது இந்த தகவல்கள் போலியானது என்று அரசு அதிகாரி வட்டாரங்கங்கள் தெரிவிக்கின்றனர் .