திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிபாட்டு தலங்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் தொகுதி வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தொகுதியில் உள்ள முஸ்லிம்கள், முக்கிய பிரமுகர்கள், கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் திண்டுக்கல் பகுதியில் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டுறவு வங்கி தலைவர் சதீஷ், வெங்கடேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். அதன்பின் திண்டுக்கல் சீனிவாசன் பாரதிபுரம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க. செய்த சாதனைகளை அங்கு வந்த பக்தர்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். இதையடுத்து அமைச்சர் சவேரியார்பாளையம் வெல்லிமலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் சிவபிரசாந்த், கோவில் நிர்வாக தலைவர் ஜெய்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக வரவேற்றனர். இதையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர் அங்கு வந்த முருக பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தார். அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும். அப்போது தான் திண்டுக்கல் தொகுதி மேன்மேலும் வளர்ச்சி பெறும். ஆதலால் எனக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பிரச்சாரத்தில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.