மழை பெய்யும் முன்னரே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும், பொதுப்பணித் துறையும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
த.மா.கா தலைவர் ஜிகே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தமிழக அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து சென்னை மற்றும் கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்ட பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை முழுமையாக அகற்றி, சாலை போக்குவரத்து, குடிநீர் வழங்குவது, கழிவுநீர் செல்வது, மின்கம்பம் ஆகிய பிரச்சனைகளை விரைவில் சரி செய்ய வேண்டும். மேலும் சாய்ந்து இருக்கும் மரங்களையும் சரி செய்ய வேண்டும். ஏற்கனவே மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்தால் தான் அடுத்து பெய்ய இருக்கும் மலழையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும்.
அதனால் தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பிப்பதற்கு முன்னர் உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதார துறையும், பொதுப்பணித் துறையும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். முக்கியமாக தமிழக அரசு நெல் மூட்டைகளை பாதுகாத்தல், விவசாய பயிர்கள் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், கரையோர மக்களின் பாதுகாப்பு நிவாரண உதவி வழங்குதல் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.