தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.104.83- க்கும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.100.92- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்த்தப்பட்ட நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.