தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழக முழுவதும் கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.அவ்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முதல் முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக மீண்டும் பொதுமடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். முழு ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சமீப காலமாக மெல்ல மீண்டு வரும் நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல நடைபெறவில்லை. தேர்வுகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி இரண்டு வாரங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பது மாணவர்களின் கல்வி குறித்தும் உடல்நிலை குறித்தும் ஒரு சில கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் கொரோனா காரணமாக வகுப்புகளை சுழற்சி முறையில் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தவும் அதன் பிறகு அரசின் அறிவிப்பை தொடர்ந்தும் வகுப்புகளை மாற்றும் முடிவை தனியார் பள்ளிகள் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.