புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஈஸ்டர் சன்டேவும் அதற்குப் முன்பு வரும் புனித வெள்ளியும் மிக முக்கியமானதாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு புனித வெள்ளி ஏப்ரல் 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநில சிறுபான்மை தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுபிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையை துக்க நாளாக புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உண்ணா நோன்பிருந்து, ரத்த தானம் செய்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், எனவும் இது போன்று அறிவுப்பு ஏதும் தியாகத்திற்கு சிறப்பான அஞ்சலியாக இருக்கும்” என்று பீட்டர் அல்போன்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.