தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போது 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு செய்யும். அந்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேசப்படும். நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவுசெய்யப்படும். மேலும் பள்ளிகளை திறப்பதற்குரிய பல்வேறு மாநிலங்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்தையும் கவனித்து அதற்கேற்ற முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.