தமிழகம் முழுவதும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பதிவாகி வரும் கொரோனா 3-வது அலை தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார கடைசி நாளான ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமலில் இருந்து வருகிறது. அதே சமயம் மாநிலம் முழுவதும் மத வழிபாடுகளுக்கு தடை விதித்துள்ள அரசு திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகள் போன்றவற்றுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் தினசரி நோய் தொற்று பரவல் சற்று வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஒரு சில தினங்களாக கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு அல்லது தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் நாளை (ஜன.27) மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் தினசரி அமல்படுத்தப்பட்டு வருகிற இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஊரடங்கு குறித்த இறுதி முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.