Categories
அரசியல்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலா…? சென்னை வரும் அதிகாரிகள்…!!

அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரையை தொடங்கிய நிலையில் தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வர உள்ளனர். இன்று மதியம் சென்னை வரும் அவர்கள் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

15வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 23 உடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும். அந்த அடிப்படையில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன்பாக தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது என்பதால் எனது பிரச்சாரத்தை விரைவில் தொடங்க உள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. அதேபோன்று எதிர்க்கட்சிகளை பொருத்தவரை தங்களின் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார்கள். திமுக, மக்கள் நீதி மய்யம் போன்றோர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் விரைவில் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக பலவேறு பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது.

தேர்தலைப் பொருத்தவரை வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் அதற்கான அறிவிப்பாணையை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மே 20ஆம் தேதிக்கு முன்பாக வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு மே 24க்கு முன்பாக பொறுப்பேற்க வேண்டும் இதுதான் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சென்னை வருகை தருவது முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுபோன்ற பல விஷயங்களை முன்னிறுத்தி அதற்கான பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் தற்போது வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |