தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரையும் மேம்படுத்துவதற்கு விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தேசிய செட்டியார் பேரவை மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரையும் மேம்படுத்துவதற்கு மிக விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு அறிவித்த உள் ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் மாற்றம் ஆகியவற்றால் பல சமூகத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.