தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஒரே நேரத்தில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மக்கள் அந்தந்த பகுதிகளிலே பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். பொருட்கள் வாங்குகிறோம் என்ற பெயரில் தேவையின்றி வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்றால் மக்கள் புகார் அளிக்கலாம் என கூறியுள்ளது.