தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புக்காக மட்டும் கோவை மாவட்டத்துக்குள் வந்து செல்ல இ-பதிவு அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் கோவை மாவட்டத்திற்கு வருகை தரவும், வெளியே செல்லவும் இ-பதிவு அனுமதிக்கப்படும். ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை கோவை மாவட்டம் முழுவதும் இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.