தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பலனாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு சில மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை. அதன்படி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் மூன்று நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.