ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று கூடியது. இந்நிலையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் பள்ளிக்கல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் “கடந்த ஓராண்டுக்காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப்பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நம் அரசு பல திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புது வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச் சுவரும், பராமரிப்புப் பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியும் என மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தேவை என கண்டறியப்பட்டு, அவற்றைப் படிப் படியாக ஏற்படுத்தித் தருவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி நடப்பு ஆண்டில் சுமார் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது. தரமான கல்வியை நம் அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், சென்ற 2 வருடங்களில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
ஆகவே அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு புது வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்து இருப்பதால் , கூடுதலான வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புது வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக நடப்பு ஆண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசுப் பள்ளிகளை நாடிவரும் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதிசெய்யப்படும் என நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.