தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களும் தமிழகத்தில் ரேஷன் கடைகள் இயங்காது.