தமிழகத்தில் நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்ணடி தம்பு செட்டி தெருவில் அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்கள் என தமிழக முழுவதும் 80 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் உள்ள ரேஷன் பொருள் விநியோக நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் இன்றும் அந்த நிறுவனங்களில் பணிபுரிவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மீறி உள்ளே வருபவர்களை தடுக்கும் விதமாக துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.