தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு சீரழிவினைத் தடுப்பதற்கு உள் நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அதை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. சென்ற சில வருடங்களாக வேலைவாய்ப்பு தேடி தமிழகத்திற்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை பல லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வடமாநிலத்தவர் ஆதிக்கம் இப்போது தமிழகத்தின் 2ம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. அதுமட்டுமல்லாமல் அவ்வாறு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்பஅட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழகத்தில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு படிப்படியாக மாறிவருகிறது. அத்துடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில்நகரங்களில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு போன்ற செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் சமீபக்காலமாக அதிகரித்து வருகிறது.
இதனால் மேற்குமாவட்டங்களில் பொதுமக்கள் கடும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ்சூழலே நிலவுகிறது. நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு தவறிய தமிழக அரசின் அலட்சியப்போக்கே, இப்போது காவல் ஆய்வாளர் உட்பட 7 காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கி கட்டுக்கடங்காத உச்சகட்ட வன்முறையில் ஈடுபடும் அளவிற்குச் சட்ட ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணம் ஆகும். எனவே தமிழக அரசு இதற்கு மேலாவது விழித்துக் கொண்டு பணிக்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி போன்றவற்றை பதிவு செய்யும் அடிப்படையில் உடனே உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.