தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 20ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 20ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல 21ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 21ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் 21 ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, 17ஆம் தேதி அரபி கடல் பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், 18ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 47 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அங்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.