தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வெளி இடங்களில் அதிகம் கூட கூடாது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசிகளை போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி தற்போது 15-18 வயதுள்ள சிறார்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய நாள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் போட்டி மற்றும் நேர்முக தேர்வுக்கு செல்வோருக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், பொதுமுடக்கத்தின் போது போட்டித் தோ்வு எழுத செல்வோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதற்கு பலரும் போக வேண்டிய நிலை இருக்கிறது. மேலும் பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத் தோ்வுகளுக்கும் இளைஞா்கள் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் போட்டித் தோ்வு, நோ்முகத் தோ்வுகளுக்குச் செல்பவர்கள் தோ்வு மையத்தின் அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் போன்றவற்றை காட்டி தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.