தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முடிகிறது. இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கணித பாடத்துக்கான திருப்புதல் தேர்வில் 2 வகை வினாத்தாள்களும் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகியது. இதேபோன்று முதல்கட்ட திருப்புதல் தேர்விலும் வினாத்தாள்கள் லீக் ஆகி பிரச்னை ஏற்பட்ட சூழலில், 2-ம் கட்ட தேர்விலும் லீக் ஆனதால் பள்ளிக்கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் லீக் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டங்களிலுள்ள அச்சகங்களில் வினாத்தாளை அச்சடித்துள்ளனர். அந்த அச்சகங்களில் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் யு டியூபர்கள் சிலர் வினாத்தாள்களை பெற்று சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையில் 10ஆம் வகுப்புக்கு நேற்றுடன் 2 கட்ட திருப்புதல் தேர்வுகள் முடிந்தது. தற்போது 12 ஆம் வகுப்புக்கும் இன்றுடன் 2 கட்ட திருப்புதல் தேர்வு முடிகிறது. இந்த நிலையில் 11ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு இன்று தொடங்க இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-1 மாணவர்களுக்கு எவ்விதமான தேர்வும் நடத்தப்படாத சூழ்நிலையில் முதல் தேர்வாக இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் அடிப்படையில் மாநிலம் முழுதும் பொதுவான வினாத்தாளை பயன்படுத்தி இந்த தேர்வு நடத்தப்படுகிறது.