தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், எஸ்.எஸ்.எல்.சி, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள், 2021 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் இந்த ஆண்டு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்தால் போதுமானது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் தமிழகத்திலேயே கல்வி பயின்றவராக இருக்க வேண்டும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். வேறு எந்தவித உதவித்தொகை பெறாதவராகவும், பள்ளி மற்றும் கல்லூரி சென்று படிக்காதவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.