தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலம் தினசரி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் கடந்த வருடம் கொரோனா காரணமாக 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதன்படி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல் 25-ஆம் தேதி 10, 11, 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்றும், மே 5-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே 6-ல் தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 9ஆம் தேதி தொடங்கும் 11ஆம் வகுப்புக்கான தேர்வு மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இணையத்தில் பாடவாரியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களும் வெளியாகியுள்ளது. அதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 கடைசி வேலை நாள் ஆகும். அதன் பிறகு அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. கோடை விடுமுறை 30 நாட்கள் முடிந்ததும் மீண்டும் பள்ளிகள் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்படும். அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பால் தற்போது மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.