தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வருடந்தோறும் இலவசமாக நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மே மாதம் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையானது நடைபெறும் போதே புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, ஜாமெட்ரி பாக்ஸ் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுவிடும்.
இல்லையெனில் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு இலவச நோட், புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது வரை இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இப்போது வரைக்கும் இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் தங்களுடைய சொந்த செலவிலேயே நோட், புத்தகங்களை வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் ஒருசில பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே மாணவர்களுக்கு நோட், புத்தகங்களை வாங்கிக் கொடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மாணவர்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு உடனே இலவச நோட் புத்தகங்களை வழங்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.