தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது மாணவர்களுடைய கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் தேர்வை நடத்துவதிலும், தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி முடிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை 100 சதவீத மாணவர்களுடன் முழு நேர வகுப்புகளை நடத்தி விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான நாட்களில் கற்பித்தல் பணி நடைபெறவில்லை. இதனால் மீதம் உள்ள நாட்களை பயன்படுத்தி கற்பித்தல் இடைவெளியை சரி செய்யுமாறு பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.