தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து திருச்சி அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனால் பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறை சுவர்கள் சேதமடைந்துள்ளது. அவ்வாறு சேதமடைந்துள்ள பள்ளி வளாகத்தில் சுவர்களை முதலமைச்சரின் ஆலோசனைப்படி உடனே இடித்து சரி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு ரத்து செய்வதோ, பாடத்திட்டங்கள் இன்னும் குறைக்கவோ முடியாது. ஆனால் தற்போது CBSE பள்ளிகளில் மட்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. நம்மைப் பொறுத்தவரை இது போன்ற தேர்வுகள் எதுவும் இப்போது நடத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.