தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா 3-வது அலை வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 10 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா பெருந்தொற்றால் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வுகள் நடந்தது. 10-ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ்-2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 28-ல் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முதல்வருடன் ஆலோசனை நடத்தி, தேர்வுக்கான அட்டவணையை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 25-ல் பொதுத்தேர்வை தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்று வந்த பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுதேர்வை நடத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஏப்ரல் 26-ல் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான இரண்டாம் கட்ட பருவத்தேர்வு முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.