தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. எனவே இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால் மீண்டும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொது தேர்வு நடைபெறுமா ? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும். இது தொடர்பான நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் ஏதேனும் ஆலோசனைகள் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அதனை பின்பற்றி எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.