தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மதம், சாதி உள்ளிட்ட 12 வகையான விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து பணிகளையும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.