தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் சற்றே குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு, திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களுக்கு முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும். மேலும் விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம் பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டுமே இடம் பெற வேண்டும்
பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள்களில், அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக குறிப்பிட வேண்டும். 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு எண்ணாக, ‘எமிஸ்’ எண்ணின் கடைசி ஐந்து இலக்க எண்களோடு, வரிசை எண்ணையும் சேர்த்து, எட்டு இலக்க எண்ணை விடைத்தாளில் பதிவிட வேண்டும். ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். ஆசிரியர்கள் காலை 8:00 மணிக்குள், தங்களின் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில், வினாத்தாள்களை பெற்று, அவற்றை முறையான பாதுகாப்புடன், பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.