தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிக கன மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் அதி கனமழை முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது. அதில் மூன்று இடங்களில் அதிக கன மழையும், 12 இடங்களில் மிக கன மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழையும், தூத்துக்குடியில் 27 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 23 செ.மீ. மழையும், நாகப்பட்டினத்தில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ., குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ., வைப்பாற்றில் 15 செ.மீ., காரைக்கால் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.