தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களை கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தன்னார்வலர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகின்றது.
இந்தப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் ஆறு மாத காலம் தினமும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் பாடல், ஆடல், நாடகம் மற்றும் பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சுகாதாரமான, கற்பித்தல் மையங்கள் பாதுகாப்பானதாக குழந்தைகளை அடக்கக் கூடிய வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இருத்தல் வேண்டும். அரசு கட்டிடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமனம் செய்யப்பட வேண்டும். வகுப்புகள் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.