தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு ஏற்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். அதன்படி விருதுநகர், திருப்பத்தூர், தர்மபுரி, கடலூர், ராமநாதபுரம், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி பணி மோசமாக உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்த வேண்டும் என்று 13 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.