தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நாளை மறுதினம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக பருவ காலம் முடிந்த பிறகும், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை மறுதினம் (சனிக்கிழமை) மற்றும் அதற்கு அடுத்த நாளும் (13ஆம் தேதி), சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் தென் தமிழக மாவட்டங்கள் இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்கள், மேலும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதை அடுத்து தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.