தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அடுத்தடுத்து ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இன்று மாலை நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், “தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும்” என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த கோரிக்கை குறித்து ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். அமைச்சரவை ஒப்புதல் தரும் பட்சத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.