தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது.
அதில் சென்னை முதல் இடத்திலும் கோவை இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதனைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த வருடம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இதுவரை 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்கள் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முக கவசம் அணிவது அவசியம். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை சரிவர வழங்கப்படவில்லை. எனவே ஒரு குழு அமைத்து விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.