தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதியை இறுதி செய்யும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.