தமிழகத்தில் +2 பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்க நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் +2 பொதுத்தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். தேர்வு நடத்தப்பட்டால் உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் ஒப்புதல் பெற்று ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதுகுறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.