பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆட்டோ கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவசர தேவைக்காக ஆட்டோகளை நாடிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்களிடம் சாதாரணமாக ரூபாய் 40 கட்டணம் வசூலிக்கப்பட்ட இடத்திற்கு ரூபாய் 70 முதல் ரூபாய் 80 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விலை உயர்வை கண்டித்து ஆட்டோ சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒரு சிலர் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.