தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பாக அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தின் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்படுகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி களையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும். இதுதவிர காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
மேலும் சட்டப்பேரவையில் புதிய நகராட்சிகள் தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர்,நந்திவரம்- கூடுவாங்ஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன் பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேருராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல். புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.