தமிழகத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையின் சார்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் மூன்று புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.4,194.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவடையும்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.