தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை வருகிற 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19- 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஆகவே தேர்தல் நடைபெற இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
ஞாயிறு வழக்கம்போல் விடுமுறை ஆகும். அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க இருக்கிறது. தேர்தலுக்கு பின் பள்ளிகள் மறுபடியும் 23 ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.