தமிழகத்தில் 525 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவலை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் திடீரென கொரோனா அதிகரித்து வருவதால்,மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருந்தாலே அது கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தான். விதி மீறலில் ஈடுபடும் பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என கூறியது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களில் எண்ணிக்கை 15 இல் இருந்து 525ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் 54 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்றும், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.