தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை,மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.10 மற்றும் 11-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.